இராமபிரான் திருஅவதாரம் செய்த ஸ்தலம். பிரம்மதேவனின் முதல் பிள்ளையாகிய ஸ்வாயம்புவமனுவுக்கு மகாவிஷ்ணு வைகுண்டத்தின் மத்தியிலிருந்து அயோத்தி என்னும் பாகத்தை கொடுக்க, அவர் அதை பூலோகத்திற்குக் கொண்டுவந்து சரயூ நதியின் தென்கரையில் ஸ்தாபித்தார் என்று கூறப்படுகிறது.
மூலவர் ஸ்ரீராமன், ரகுநாயகன் என்னும் திருநாமங்களுடன் வீற்றிருந்த திருக்கோலம், வடக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு சீதாபிராட்டி என்பது திருநாமம். பரதாழ்வார், தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கு பகவான் பிரத்யக்ஷம்.
அம்மாஜி மந்திர் என்னும் பெயருடன் தென்னிந்தியப் பாணியில் கட்டப்பட்ட கோயில். இங்கு இராமர் சந்நிதியுடன் ரங்கநாதர் சந்நிதியும் உள்ளது. தென்னிந்திய வைணவர் மரபினரே இங்கு பூஜை செய்கின்றனர். ஆழ்வார்கள் பாடிய கோயில் தற்போது இல்லை.
முக்தி தரும் ஏழு நகரங்களுள் இதுவும் ஒன்று. ஹரித்துவார், வாரணாசி, துவாரகை, மதுரா, உஜ்ஜயினி, காஞ்சிபுரம் ஆகியவை மற்ற ஆறு நகரங்கள்.
பெரியாழ்வார் 6 பாசுரங்களும், குலசேகராழ்வார் 4 பாசுரங்களும், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் தலா ஒரு பாசுரங்களுமாக மொத்தம் 13 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|